கரோனா வைரஸ் அறிகுறிகள் அல்லது தொற்று சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சென்னை மனநல ஆலோசனை அமைப்பின் ஆலோசகர்கள், பாதிக்கப்பட்டவர்களின் தாய்மொழிகளில் உரையாடி ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

கரோனாவின் வீரியத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. கரோனா தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படுபவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தன்னம்பிக்கை அளிக்க 'பேசலாம் வாருங்கள்' என்ற உரையாடல் நிகழ்ச்சியை சென்னை மனநல ஆலோசனை அமைப்பின் ஆலோசகர்கள் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மனநல ஆலோசனை அமைப்பின் தலைவரான கல்பனா சூர்யகுமார் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், "எங்களது மனநல ஆலோசனை அமைப்பின் மூலமாக பல்வேறு இக்கட்டான சூழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சேவைகள், உதவிகள் செய்துள்ளோம். செய்து வருகிறோம்.

தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியாக தைரியம் அளிப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். கரோனா பாதிப்பு உள்ள இந்த இக்கட்டான சூழலில் தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானது.

ஆனால், அந்தத் தனிமை அவர்களுக்கு மேலும் மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது. ஏனெனில், தொடர்ச்சியாக பல நாட்களுக்கு தனிமையில் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்காகவே 'பேசலாம் வாருங்கள்' என்ற உரையாடல் நிகழ்வைத் தொடங்கியுள்ளோம்.

எங்களது அமைப்பில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, இந்தி என பலதரப்பட்ட மொழிகள் பேசும் மனநல வல்லுநர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு வீடுகளில் தனிமையில் வாடுபவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகள் மற்றும் மன உளைச்சலைக் குறைத்து தன்னம்பிக்கையை அதிகரித்து வருகிறோம்.

இதற்காக எங்களின் பிரத்யேக முதன்மை மனநல மேம்பாட்டு ஆலோசகர்களான கல்யாணசுந்தரத்தை 94458-08145 என்ற எண்ணில் காலை 10 முதல் 1 மணி வரையிலும், டாக்டர் ஜானகிராமனை 75500-21609 என்ற எண்ணில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும், ஹரிணி ஸ்ரீராமை 99414-47190 என்ற எண்ணில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.

அதன்பிறகு, அவரவர் விரும்பும் தாய்மொழியில், அவர்கள் விரும்பும் நேரத்தில் அனுபவமிக்க மனநல ஆலோசகர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு தேவையான உளவியல் ஆலோசனைகளையும், மருத்துவ ரீதியிலான அறிவுரைகளையும் வழங்குவர். தொடர்பு கொள்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இந்த இலவச சேவை வரும் மே மாதம் வரை தொடரும்" என்றார்.

covid-19-talk
covid-19-talk